காமத்துப்பால் (Love)

நெஞ்சொடு கிளத்தல் (Soliloquy)

கற்பியல் (The Post-marital love)

மு.வரதராசனார்: நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?

சாலமன் பாப்பையா: நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா?

மு.வரதராசனார்: என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!

சாலமன் பாப்பையா: என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.

மு.வரதராசனார்: நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!

சாலமன் பாப்பையா: நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்? நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் எண்ணம் இல்லை.

மு.வரதராசனார்: நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

சாலமன் பாப்பையா: நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும்.

மு.வரதராசனார்: நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ?

சாலமன் பாப்பையா: நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?

மு.வரதராசனார்: என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.

சாலமன் பாப்பையா: என் நெஞ்சே! நான் அவருடன் ஊடினால் அந்த ஊடலை என்னுடன் கூடி நீக்கவல்ல என் அன்பரைக் கண்டால் பொய்யாகவாவது கொஞ்சம் ஊடிப் பிறகு ஊடலை விட்டுக் கூடமாட்டோம். இப்போது அதையும் விட்டுவிட்டு அவரைக் கொடியவர் எனப் பொய்யாக வெறுப்பது போல் இருக்கின்றாய்; இதை விடுத்து அவரிடம் போயேன்.

மு.வரதராசனார்: நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.

சாலமன் பாப்பையா: நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விடு; இரண்டையுமே விடமுடியாது என்பது உன் எண்ணம் என்றால், ஒன்றிற்கொன்று வேறுபட்ட இந்த இரண்டையும் சேர்த்துத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை.

மு.வரதராசனார்: என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை.

சாலமன் பாப்பையா: என் நெஞ்சே! நம் பிரிவுத் துன்பத்தை அவர் அறியார். அதனால் வருந்தி அவர் நம்மீது அன்பு காட்டாமல் இருக்கின்றார் என்று எண்ணி, நம் நிலையை அவர்க்குக் கூறுவதற்காக, அவர் பின்னே ஏங்கிச் செல்லும் நீ ஏதும் அறியாத பேதையே!

மு.வரதராசனார்: என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?

சாலமன் பாப்பையா: என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?

மு.வரதராசனார்: நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.

சாலமன் பாப்பையா: நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு இழந்த புற அழகை மட்டுமே அன்று இருக்கும் அக அழகையும் இழக்கப் போகிறோம்.