மு.வரதராசனார்: யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.
சாலமன் பாப்பையா: குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி.
மு.வரதராசனார்: உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
சாலமன் பாப்பையா: உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.
மு.வரதராசனார்: அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
சாலமன் பாப்பையா: அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.
மு.வரதராசனார்: குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.
சாலமன் பாப்பையா: குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.
மு.வரதராசனார்: நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.
சாலமன் பாப்பையா: அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.
மு.வரதராசனார்: ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.
சாலமன் பாப்பையா: ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.
மு.வரதராசனார்: உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
சாலமன் பாப்பையா: ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.
மு.வரதராசனார்: எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.
சாலமன் பாப்பையா: நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான்.
மு.வரதராசனார்: குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.
சாலமன் பாப்பையா: அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில்.
மு.வரதராசனார்: கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.
சாலமன் பாப்பையா: கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.