மு.வரதராசனார்: சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச் சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.
சாலமன் பாப்பையா: செஞ்சொல் பொருள் வெளிப்படையான சொல் தாய் இலக்கணச் சொல்.(வெளிப்படையான பொருளை விட்டுவிட்டு வேறொன்றை உணர்த்தும் சொல் ஊர் தூங்குகிறது) குறிப்புச் சொல் வெளிப்படையான பொருளை விட்டுவிட்டுக் குறிப்பால் வேறொரு பொருள் தருவது பொன்காக்கும் பூதம் அவன்) ஆகிய சொற்களின் கூட்டத்தை அறிந்த மனத்தூய்மையை உடையவர். தமக்கும் மேலான கல்வியாளர் கூடியிருக்கும் அவை. சமமானவர் அவை. குறைவான கல்வியாளர் அவை என அவற்றின் தரம் அறிந்து அங்கே பேசும் திறத்தை ஆராய்ந்து பேசுக.
மு.வரதராசனார்: சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.
சாலமன் பாப்பையா: மூவகைச் சொற்களும் பொருள் தரும் போக்கை நன்கு தெரிந்து கொண்ட நல்லறிவு படைத்தவர், சொற்குற்றமும் பொருட்குற்றமும் வந்துவிடாமல், கேட்போர் விரும்பிக் கேட்கும் நிலைமையையும் மிகத் தெளிவாக அறிந்து பேசுக.
மு.வரதராசனார்: அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை.
சாலமன் பாப்பையா: தம் பேச்சைக் கேட்கும் சபையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் கூறம் தெரியாதவர்; சொல்லும் திறமும் இல்லாதவர்.
மு.வரதராசனார்: அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா: தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக.
மு.வரதராசனார்: அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது.
சாலமன் பாப்பையா: தன் அறிவினுக்கும் மேலான அறிஞர் கூடியுள்ள அவையில் அவர் பேசுவதற்கு முன்பாகப் பேசாமல் அடங்கி இருப்பது, நல்லது என்று சொல்லப்பட்ட குணங்களுள் எல்லாம் நல்லது.
மு.வரதராசனார்: விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.
சாலமன் பாப்பையா: பலதுறை நூல்பொருள்களைக் கேட்டு உணரும் திறம் மிக்கவர்முன்னே ஆற்றல்மிக்க பேச்சாளன் சொல்லால் சிறுமைப்படுவது மேலான நெறியிலிருந்து நிலைதவறி விழுவதைப் போல ஆகும்.
மு.வரதராசனார்: குற்றமறச்சொற்களை ஆராயவதில் வ ல்ல அறிஞர்களிடத்தில் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தொன்றும்.
சாலமன் பாப்பையா: சொற்களைப் பிழை இல்லாமல் பொருள் அறியும் ஆற்றல் படைத்தவர் கூடிய அவையில் பேசும்போது, பலவகை நூல்களையும் கற்று, அவற்றின் சிறப்பை அறிந்த பேச்சாளரின் கல்வித்திறம் அனைவருக்கும் விளங்கும்.
மு.வரதராசனார்: தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா: பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும் பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போலாம்.
மு.வரதராசனார்: நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.
சாலமன் பாப்பையா: நல்லவர் கூடி இருந்த அவையில் நல்ல பொருள்களைக் கேட்பவர் மனம் ஏற்கப் பேசும் திறம் படைத்த பேச்சாளர், அவற்றை ஏற்கும் திறம் அற்ற சிறியோர் கூடி இருக்கும் அவையில் மறந்தும் பேச வேண்டா.
மு.வரதராசனார்: தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.
சாலமன் பாப்பையா: தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்.