மு.வரதராசனார்: (எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.
சாலமன் பாப்பையா: ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்.
மு.வரதராசனார்: மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.
சாலமன் பாப்பையா: மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.
மு.வரதராசனார்: ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.
சாலமன் பாப்பையா: எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.
மு.வரதராசனார்: எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.
சாலமன் பாப்பையா: ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும்.
மு.வரதராசனார்: காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.
சாலமன் பாப்பையா: கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.
மு.வரதராசனார்: காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.
சாலமன் பாப்பையா: நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!
மு.வரதராசனார்: இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.
சாலமன் பாப்பையா: இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.
மு.வரதராசனார்: அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.
சாலமன் பாப்பையா: இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.
மு.வரதராசனார்: அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.
சாலமன் பாப்பையா: அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?
மு.வரதராசனார்: யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.
சாலமன் பாப்பையா: நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்.