தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.

எண்: 249
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: அருளுடைமை (Compassion)
இயல்: துறவறவியல் (Ascetic Virtue)

மு.வரதராசனார்: அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.

சாலமன் பாப்பையா: மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.

மு.கருணாநிதி: அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்